மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்....
"இந்த விழாவிற்கு திருமுருகன் காந்தி வருகைத்தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ். நான் எதிர்பார்க்கவில்லை. அவரை காதலைப் பற்றி பேசவேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம். உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது. அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படித்த, புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள். என்னை தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன். எல்லா நல்ல விஷயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன். இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.”என்றார்.