நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதனிடையே விஜயகாந்தின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை அவரது தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம் அருகே கீழ் மனம்பேடு என்ற பகுதியில் ஒரு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் தெரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் வேடசந்தூர் அருகேயுள்ள குண்டாம்பட்டி கிராமத்தில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, சாமிக்கு விரதம் இருப்பது போல் விரதமிருந்து, “கருப்பு தேவனே போற்றி... போற்றி...” என வழிபட்டு அவர்கள் மாலை போட்டுக்கொண்டனர். மேலும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு யாத்திரையாகச் செல்கின்றனர்.