உறியடி 2 ஆம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட உறியடி படங்களின் இயக்குனரும், நடிகருமான விஜயக்குமாரிடம், உறியடி முதல் பாகத்தில் சாதிய பிரச்சனைகளைப் பேசியிருப்பீர்கள், நேரடியாக உங்களுக்கு சாதியத்தால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கிறதா என்று கேட்டபோது அவர் கூறியவை...
இங்கு நான் என்பது என்ன என்பதே கேள்வியாக இருக்கு. நான் என்னை மட்டும் நான் என பார்க்கவில்லை. என்னைச் சுற்றி இருக்கிறவர்களையும் நானாகத்தான் பார்க்கிறேன். நான் காலேஜில் படிக்கும்போது நிறைய நண்பர்கள் இருந்தார்கள், அவர்கள் எல்லோரும் நான் தான். அவர்கள் அப்படியெல்லாம் செய்தார்கள். ஹாஸ்டலில் ரேண்டமாக ரூம்கள் கொடுத்தாலும் இவர்களாக ரூமை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் இருந்த சூழல் அப்படி மாற்றவைக்கிறது. ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போகும்பொது அங்கு நடக்கின்ற விஷயங்கள் நாமெல்லாம் ஒன்னுங்கிறது ஹாஸ்டலுக்கு உள்ள மட்டும்தான் வெளியே இல்லை என்பதை நிறைய உணர்த்தியது.
எனக்குத் தெரிந்து 25 வருடங்களுக்கு முன்புவரை சாதி என்பது தனிமனிதனின் விருப்பு வெருப்புகளோடு அடங்கியிருந்தது. பொண்ணுக் கொடுத்து பொண்ணு எடுக்கிறது, வீட்டுக்கு வருவது போவது என்பது போன்ற விஷயங்களில் இருந்தது. காலப்போக்கில் காதல் திருமணங்களாலும் நண்பர்களாலும் அந்த சாதி உணர்வுகள் குறைவதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால், இப்போது நாம் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். இந்தமுறை செயற்கையாக சாதி வெறி ஊட்டப்படுகிறது. இந்த சாதியை வைத்து மக்களை பிரித்து, அதை வாக்கு வங்கியாக மாற்ற நினைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவங்க இருக்கிறவரைக்கும் எப்படி சாதி ஒழியும்? சாதி ஒழிந்துவிட்டால் அவர்கள் எதைவைத்து வியாபாரம் செய்வார்கள்? எப்படி சீட் வாங்குவார்கள்? எப்படி ஓட்டு வாங்குவார்கள்? அதனால், இவர்கள் இருக்கிறவரைக்கும் சாதி ஒழியாது.
இப்போது, ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப் என எல்லாவற்றிலும் சாதி உணர்வை அப்கிரேடு பண்ணிட்டாங்க. இளைஞர்களுக்கும், சின்னப்பசங்களுக்கும் விவேகத்தைவிட வேகம் அதிகமாக இருக்கும், எதையாவது செய்யவேண்டும் என்ற வேகம் இருக்கும். அந்தமாதிரியான இளைஞர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, அந்த இளைஞர்களுக்கு இந்த வாக்கு வங்கி அரசியலை சொல்லிக்கொடுக்கணும், அதை என் கடமையாக நினைத்தேன். ஏனென்றால், நானும் அப்படிப் பட்ட மாணவன் தான். ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு எப்போ எவன் சிக்குவான், பிரச்சனை பண்ணலாம்னு சுத்தின பசங்களில் நானும் ஒருத்தன். எங்க காலேஜ் உள்ளே ஸ்கெட்ச் போட்டு தூக்குகிற அளவுக்கு அரசியல் வந்துச்சு, நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன். அதனால், அந்தமாதிரி இருக்க பசங்களுக்கு இதனுடைய வீரியத்தை எடுத்து சொல்லணும் என்பதுதான் என் நோக்கம்.
லட்டர் பேடு கட்சி என்ற ஒரு வார்த்தை இருக்கும், 5%, 10% ஓட்டு வச்சுருக்காங்க என்று கிண்டல் செய்வோம், அந்த மாவட்டத்தை விட்டு வெளியில் அந்தக் கட்சி தெரியாமல்கூட இருக்கும். ஆனால், அவர்கள்தான் பவர்ஃபுல். மக்கள் எப்பவுமே இரண்டு பிராதான கட்சிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகிற மனநிலையில் தான் இருக்கிறார்கள். நிறைய தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருப்பார்கள். அப்போது வெற்றியை நிர்ணையிப்பது 10,000 அல்லது 15,000 வாக்குகளை வைத்திருக்கிற இவர்கள்தான். இவர்களுக்குள் ஒற்றுமையை விடவே மாட்டார்கள், அப்படி ஒற்றுமை போனால் கொலுத்திப்போடுவார்கள், ஒற்றுமை வரும், அது வாக்காக மாறும்.