கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார். இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
இந்நிலையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கரோனா விழிப்புணர்வுக்காக எஸ்.பி.பி பாடிய பாடல் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்...
"அன்புள்ள எஸ்.பி.பி,
உங்கள் பாடல் முதல் வரிசையில் நின்றுகொண்டு, கரோனாவிற்கு எதிராக போராடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உத்வேகத்தை உயர்த்துகிறது. உங்களின் பாராட்டு மற்றும் நன்றி வார்த்தைகள் மன உறுதியை உயர்த்துகிறது. நீங்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக எழுந்து பாடுங்கள். உங்கள் உயிர்த்தெழுதலுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
Dear SPB, your song boosts the spirits of thousands of #COVID frontline workers. The words of appreciation and thanks lifted the morale. Rise and sing for the millions of people praying for your recovery. I pray for your resurgence.#prayforSPB #GetWellSoonSPBSIR #Vijayabaskar pic.twitter.com/Ro3P9uY9aM
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) August 20, 2020