திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.
இதையடுத்து கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் கட்சிக் கொடியினை அம்மாநாட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ண கொடியின் மத்தியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை (22.08.2024) ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்து வகையில் கடந்த 19ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் உள்ள அலுவலகத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் விஜய் நிறுவப்பட்ட கொடி கம்பத்தில் கொடி ஏற்றி ஒத்திகை பார்த்தார். அந்த கொடி மஞ்சள் நிறத்தில் நடுவில் விஜய்யின் முகம் இடம்பெற்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது விஜய்யின் அருகில் இருந்த புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற வேஷ்டி சட்டையில் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் விரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்சி அறிமுகக் கொடி நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கேட்டு த.வெ.க. சார்பில் காவல் நிலையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் இருப்பதால் நீலாங்கரை மற்றும் கானாத்தூர் காவல் நிலையங்களில் த.வெ.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி அறிமுக நிகழ்ச்சி, அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் நடப்பதால் அனுமதி தேவையில்லை என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் த.வெ.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் “காலை 8 மணிக்கு விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு பனையூர் செல்லும் வரை பாதுகாப்பு வழங்க” கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய பாதுகாப்பு காவல்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கட்சிக் கொடி அறிமுக நிகழ்ச்சிக்காகத் தமிழகம், கேரளா, புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் 300 நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.