விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். பின்பு சாதித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
அப்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். அப்போது மேடைக்கு வந்த மாணவர் ஒருவர், தற்காப்புக் கலை பயிற்சி செய்து காண்பித்தார். அதைப் பார்த்த விஜய் வியப்படைந்து அவரைக் கட்டியணைத்துப் பாராட்டினார்.