நடிகர் விஜய் சேதுபதி 'குரங்கு பொம்மை' இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 'மகாராஜா' என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைக்கிறார். இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். விஜய் சேதுபதி பேசுகையில், "என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.
இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
நித்திலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது. அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது. பாய்ஸ் மணிகண்டன், அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன். மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும். அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிகப் பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்" என்றார்.