இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மகாராஜா திரைப்படம். இதனைக் கொண்டாடும் வகையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா செனையில் இன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய படத்தின் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன், “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.
நடிகை மம்தா மோகன்தாஸ், “நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய்சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் நித்திலன், “என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனைப் பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்தக் கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள். ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்தக் கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதையைக் கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது, “இந்தக் கதையைக் கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ‘விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி" என்றார்.