விடுதலை படத்தின் முதல் பாக வெற்றிக்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடுதலை பாகம் 2’. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்து. அதில் அரசியல் வசனங்கள் இடம் பெற்று, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று(20.12.2024) விடுதலை 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வெற்றி மாறன், சென்னையிலுள்ள திரையரங்கம் ஒன்றில் விடுதலை 2 படத்திற்கான ரசிகர்களின் வரவேற்பைக் காணச் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விவாதத்தின்போது, அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதைப் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அமித்ஷா பேசியது கண்டனத்திற்குரியது” என்று பதிலளித்துள்ளார்.