Skip to main content

‘விடுதலை 2’ - கடைசி நேரத்தில் மாற்றம் செய்த வெற்றிமாறன்

Published on 19/12/2024 | Edited on 19/01/2025
vetrimaaran trimmed 8 minutes in viduthalai 2

‘விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். 

ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் வரும் சில காட்சிகள் இணைக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது படக்குழு. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான இந்தபடத்தின் டரைலரில் வரும் காட்சிகளும் அதில் வரும் வசனங்களும் அமைந்திருந்தன. இப்படம் நாளை(20.12.2024) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் என இருந்தது. 

இந்த நிலையில் படத்தின் நீளத்தை குறைத்துள்ளதாக வெற்றிமாறன் தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெற்றிமாறன் பேசும் வீடியோவை விஜய் சேதுபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வெற்றிமாறன் பேசுகையில், “    விடுதலை 2 ஒர்க் இப்பதான் முடிஞ்சுது. கடைசி நேரத்துல படத்துடைய நீளத்தை 8 நிமிஷம் குறைச்சிருக்கோம். இந்தப் படத்துல ஒர்க் பண்ண எல்லாருமே நிறைய விஷயங்களை கத்துக்கிட்டோம். இந்தப் படத்தின் ட்ராவலே ரொம்ப பெருசு. நிறைய பேரின் உழைப்புதான் இந்த படத்தை உருவாக்க செஞ்சிருக்கு. அவர்களுடைய சப்போர்ட் இல்லாம இந்த படம் முடிஞ்சிருக்காது. ஒரு படமா விடுதலை 2 எப்படி வந்திருக்கு என்பதை ஆடியன்ஸ் தான் சொல்லனும். ஆனால் அனுபவமா நாங்க நிறைய கத்துக்கிட்டுக்கோம்” என்றார். 

சார்ந்த செய்திகள்