Skip to main content

விஜய் சேதுபதி முதல் ஆள் அல்ல...

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
muttiah muralidharan

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் லெஜண்டாகத் திகழ்ந்த முத்தையா முரளிதணின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அந்த கிரிக்கெட் லெஜெண்டுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இன்னொன்று, தமிழ் மக்கள் மனதுக்கு அவ்வளவு நெருக்கமாகிவிட்டார் விஜய் சேதுபதி. 'மக்கள் செல்வன்' என்று அறியப்படும் விஜய் சேதுபதி, இதுவரை அவர் பார்த்திடாத அளவிற்கு மூத்த பிரபலங்களிடமிருந்து அறிவுரை கடிதங்களையும் அறிக்கைகளையும் எதிர்கொண்டு வருகிறார். ஹேட்டர்ஸ் இல்லாத நடிகர் என்று தொடக்கத்தில் பெயர் எடுத்து வந்த விஜய் சேதுபதி அண்மை காலமாக சில விமர்சனங்களை சந்திக்கிறார். அதுவும் இந்தப் பட அறிவிப்பிற்கு பின் சமூக ஊடக வெளியில் விஜய் சேதுபதிக்கு ஹேட்டர்கள் அதிகமாகி இருக்கிறார்கள் என்றுதான் சமூக வலைதளங்களில் உலா வரும் பதிவுகளை பார்க்கும்போது தெரிகிறது. இந்த எதிர்ப்புக்கு ஆளாவதில் விஜய் சேதுபதி முதல் ஆள் அல்ல, இது முதல் படமுமல்ல.

 

முத்தையா முரளிதரண், என்னதான் தமிழராக இருந்தாலும், அவருடைய நிலைப்பாடு, தமிழீத்திற்கு ஆதரவாக இருந்ததாகத்  தெரியவில்லை. இதுமட்டுமல்லாது தமிழீல இனப்படுகொலையை அரசியல் அதிகாரத்துடன் நிகழ்த்திய ராஜபக்சேவின் அரசிற்கு பலமுறை ஆதரவு தெரிவித்திருப்பவர். இப்படி பல விஷயங்கள் அவருக்கு எதிராக கிளம்பி இருக்கிறது. என்னதான் முத்தையா முரளிதரண் பற்றிய '800' படத்தில் அரசியல் பேசப்படாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தாலும், தன்னுடைய இனம் மாண்டு கொண்டிருக்கும்போது ‘நான் ஒரு தேசியவாதி’ என்ற கேள்விக்குரிய நிலையில் இருந்தவரின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி எதற்கு நடிக்க வேண்டும் என்பது பலரின் கேள்வி. இதுவரை விஜய் சேதுபதி இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

 

தமிழீழம் சம்மந்தப்பட்ட (சம்மந்தப்பட்டவர்களின்) படங்களுக்கு பிரச்சனை வருவது இதுதான் முதல்முறையா என்ன? இல்லை, இதற்கு முன்பாக முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் ஹிட்டான கத்தி படத்திற்கு தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கொடி பிடித்தன. அதற்குக் காரணம், அந்தப் படத்தை தயாரித்த லைகா நிறுவனம். இலங்கை தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழிலதிபர் என்றாலும், அவர் ராஜபக்சேவின் கைக்கூலி என்று சொல்லப்பட்டு 'கத்தி' படம் வெளியாவதற்கு எதிர்ப்பு வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் எதிர்த்தவர்களை சமாதானம் செய்து படத்தை வெளியிட்டது லைகா நிறுவனம். இப்போது தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது.

 

2013ஆம் ஆண்டு ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான 'மெட்ராஸ் கஃபே' படம் தமிழீழ விடுதலை போராட்டம் குறித்து எடுக்கப்பட்டது. இதில் விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருந்தனர். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பெரும் பிரச்சனை ஏற்படுத்தியது. நாம் தமிழர், பாமக, திமுக போன்ற கட்சிகள் படத்தை தமிழகத்தில் வெளியிட தடை செய்ய வேண்டும் என்று கோரினர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ராஜபக்சே இந்தப்  படத்திற்கு நிதி வழங்கினார் என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது. உலகம் முழுவதுமுள்ள தமிழர்களும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று போராடினர். அதனால் ஒரு சில நாடுகளில் படம் வெளியாகவே இல்லை.

 

இதுபோல சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான சிலோன் என்கிற இனம், கழுகு பட இயக்குனர் இயக்கத்தில் உருவான சிவப்பு உள்ளிட்ட படங்களுக்கும் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள். அதற்கு முன்பு சில படங்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. தமிழீழம் சார்ந்த, தமிழீழ பின்னணி கொண்ட திரைப்படங்கள் வெளிவருவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுவதற்கு முக்கிய காரணம், அந்தப் படங்கள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடு மற்றும் அந்தப் படங்களில் இலங்கை தமிழ் பாத்திரங்கள் வடிவமைக்கப்படும் விதம் மற்றும் ஈழப் பிரச்னை படமாக்கப்படும் விதம் ஆகியவை. இந்த முறை, இந்தக் கதையில் நடிக்கவே கூடாது என்ற எதிர்ப்பு வந்திருக்கிறது. பலர் எதிர்க்க, சிலரோ இது கலைக்கான உரிமை என்றும் கூறுகின்றனர். கலை , என்றுமே வெகுஜன மனநிலைக்கு எதிராக இருப்பது ஆபத்து, அதற்கான ஆதரவு கிடைப்பது சாத்தியமற்றது.   

 

 

சார்ந்த செய்திகள்