சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 66 படக்குழுவிடம் நடிகர் விஜய் பெப்சி தொழிலாளர் நலனுக்கான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்ததையடுத்து, அடுத்தகட்ட படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் படக்குழுவிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு விஜய்யின் கோரிக்கையை ஏற்று படப்பிடிப்பை தமிழ் நாட்டில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.