விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். மேலும் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடக்கிறது. அதில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை, விஜய் கலந்து கொண்டு வழங்குகிறார். இதற்காக விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த அவர், சாலை வழியாக நெல்லை சென்றார்.
நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்த அவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி உள்ளே சென்றார். 1500 குடும்பங்களுக்கு அங்கேயே சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25000 வழங்குகிறார்.