தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன. இதனால் அவர்களது ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வருவதால் திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விஜய் ரசிகர்கள் கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில், வாரிசு படம் வெற்றியடைய கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அன்னதானங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் சன்னதியின் முன்பு 108 தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் வழிபாடு செய்தனர். பின்பு அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதே போல் படம் வெற்றி பெற ரத்ததானம் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.