விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச உணவு, ரத்ததானம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். மதுரையில் உள்ள ரசிகர்கள் சற்று வித்தியாசமாக, வெயில் மழை என்று பாராமல் மக்கள் தேவைக்காக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு 220 ரூபாய்க்கு பெட்ரோல், அவர்கள் பசி போக்கும் வகையில் அவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்கள்.
அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கினார். இந்நிலையில் மக்களுக்குத் தக்காளி இலவசமாக வழங்கியுள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மொத்தம் 100 கிலோ தக்காளியை 1 ஆளுக்கு 1 கிலோ என்ற வீதம் மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்கள். அப்போது மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில், கடந்த இரு வார காலமாகத் தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இந்த சூழலில் இலவசமாக தக்காளி வழங்கப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் மீனும் அடுத்ததாகக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர்.