கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில், திரையரங்கில் 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அனுமதியை வழங்கி அரசாணை ஒன்றை நேற்று பிறப்பித்தார். இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "50 சதவிகிதம் என்பது சில நேரங்களில் 100 சதவிகிதத்தை விட சிறப்பாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் சாமியின் இந்தப் பதிவைக் கண்டு அதிருப்தியடைந்த விஜய் ரசிகர்கள், நடிகர் அரவிந்த் சாமியைக் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.