![vjd](http://image.nakkheeran.in/cdn/farfuture/_dbBpo4Fa3-HFGMl-7FayuvA7SxdaehlTq-Am7gqjdA/1588751559/sites/default/files/inline-images/vjd%20.jpg)
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாகவும், அதற்கு நன்கொடை செய்யலாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதேபோல அவரது அறக்கட்டளைக்கு சுமார் 70 லட்சம் நன்கொடையும் வந்துள்ளது. உதவிடக் கோரியும் பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக உதவி வேண்டும் என்று கேட்டவர்களுக்கு உதவிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விஜய் தேவரகொண்டாவின் இந்தச் செயலை கடுமையாகத் தாக்கி தனியார் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டது.
அதற்குப் பதிலடி தரும் வகையில் விஜய் தேவரகொண்டா வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய நன்கொடைகளைப் பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? இது உழைத்துச் சம்பாதித்த பணம். என்னுடைய விருப்பத்தின் பேரில் அவற்றை நான் வழங்குகிறேன்." என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்குத் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட சில பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்குத் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "திரைத்துறையின் நலனை ஆதரிக்கும் ஒரு சங்கமாக, பொய்யான செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற புரளிகளையும் எதிர்க்கிறோம். சில க்ளிக்குகளுக்காகவும், தன்னார்வ அமைப்புகளின், பொதுவாழ்க்கையில் இருக்கும் சிலரின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் இது போன்ற அவதூறான கட்டுரைகள், கிசுகிசு இணையத்தளங்களால் எழுதப்படுகிறது. பத்திரிகைதுறையில் இப்போது தேவை உண்மையைச் சரிபார்ப்பதும், பாரபட்சமின்றி செயல்படுவதும் தான்" என்று தெரிவித்துள்ளது.