Skip to main content

“மனித தன்மை அற்றவர்களுக்கு மனித உரிமை காட்ட தேவையில்லை”- விஜய் தேவரகொண்டா காட்டம்

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vjd

 

 

ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா (26), மாதாபூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியங்கா, தனது சகோதரி பவ்யாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், சிலர் உதவி செய்வதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அருகில் உள்ள கடைக்கு எடுத்து சென்று சரி செய்துகொள்கிறேன் என பிரியங்கா கூறியபோதிலும், சிலர் வாகனத்தை சரிசெய்ய எடுத்து சென்றதாக போனில் கூறியுள்ளார்.

தொடர்ந்து பவ்யாவிடம் பேசிய பிரியங்கா, "தயவுசெய்து என்னுடன் சிறிது நேரம் பேசு, அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன். நான் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். பயமாக உள்ளது. என்னை முறைத்து பார்க்கிறார்கள். மிகவும் பயமாக இருக்கிறது. நான் அழுவது போல் உணர்கிறேன். எனது பைக் திரும்பி வரும் வரை தயவுசெய்து பேசிக் கொண்டே இரு" என கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பிரியங்காவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து  தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளங்களில், “நம்ம குடும்பத்துல ஒருத்தவங்களோ அல்லது நண்பர்களோ பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது நாம் தொலைப்பேசி வழியாகவாவது தொடர்பில் இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு பேர் அப்படி செய்கின்றோம்... அது மிகவும் பெரிய பயமுறுத்தக்கூடிய விஷயம்தான். 

நமது குடும்பத்திலோ, நட்பு வட்டத்திலோ சுற்றுவட்டாரத்திலோ உள்ள ஆண்களுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறான நடவடிக்கையாக இருந்தால் அதை எதிர்த்து கேளுங்கள், திருத்துங்கள். அவர்களுக்கு புரியவையுங்கள். 

மனிதனாக நடந்துகொள்ளாதவர்களுக்கு மனித உரிமை என்பதை காட்டவே தேவையில்லை, அவர்களுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டும். 

நமது வாழ்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவசர காலங்களில் 100 அல்லது 112 என்ற காவல்துறை எண்ணை தொடர்புக்கொள்ள சங்கடப்பாடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்