நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிலையில் விஜய் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சூழ கூட்ட நெரிசலைத் தாண்டி ஒரு வழியாக நிகழ்வு நடைபெறும் விடுதிக்கு வந்துள்ளார். விஜய்யை பார்த்த பிறகு அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். நிகழ்வு தொடங்கிய நிலையில் விருது கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பின்பு மேடைக்கு வந்த விஜய் பேசுகையில், அவரது விருப்பமான வசனத்துடன் 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' எனத் தொடங்கினார்.
அவர் பேசுகையில், "என்னை விட உங்களுக்கு அதிகமான விஷயங்கள் தெரியும். இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் நிறைய தகவல்கள் இருக்கிறது. அதில் முக்கால்வாசி பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் செய்தி போடுகின்ற சில பேருக்கு மறைமுக குறிக்கோள் ஒன்று இருக்கும். கவர்ச்சிகரமாக நிறைய தலைப்புடன் செய்திகள் வெளியாகும். அதில் எதை எடுத்துக்கலாம், எது உண்மை, எது பொய் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். முடிவே எப்படி எடுப்பது என்றால், உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்க படிக்க வேண்டும். சமீப காலமாக எனக்கும் படிக்கும் ஆர்வம் வந்திருக்கு. முடிந்த வரைக்கும் படியுங்கள். எல்லா தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் படிங்க. நல்ல நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கங்க. நிறைய பேர் சொல்லுவாங்க. உன் நண்பனை பற்றி சொல்லு உன்னை பற்றி சொல்றேன் என்று. எனக்கு தெரிந்து அது தற்போது மாறியிருக்கிறது. அதற்கு பதில் நீங்க எந்த சமூக வலைத்தளத்தை பற்றி சொல்லு உன்னை பற்றி நான் சொல்கிறேன்" என்றார்.