Skip to main content

“சுதாகருக்கு எழுதிய வசனம் கவுண்டமணிக்கு கச்சிதமாக பொருந்தும்” - பாக்யராஜ்

Published on 05/02/2025 | Edited on 05/02/2025

 

Bhagyaraj Speech Otha Votu Muthaiya event

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கியுள்ள நிலையில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். 

இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கே. பாக்யராஜ் பேசுகையில், “மணியைப் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம். இருந்தாலும் அவரைப் பற்றி மணியான ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதுவரை மூன்று யுகம் கடந்து விட்டதாக சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை இந்த யுகம் கவுண்டமணி யுகம். சினிமாவில் கவுண்டமணியின் யுகத்தை யாராலும் மறக்க முடியாது, மறுக்க முடியாது.

அவர் வாய்ப்புத் தேடும் காலகட்டங்களில் என் அறையில் உள்ள சோதிட புத்தகத்தை எடுத்து காண்பித்து வாசிக்க சொல்வார். அவரைப் பற்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி ஊக்கமளிப்பேன். அதன் பிறகு எங்கள் இயக்குநரிடம் கடுமையாக போராடி இந்த படத்தில் மணி தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் இரவு 12:30 மணிக்குத்தான் எங்கள் இயக்குநர் இவருக்கு ஓகே சொன்னார். அதன் பிறகு எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஆலயம்மன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று சொன்னேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.

சுதாகர் நடித்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் அவருடைய அறிமுக காட்சியில் வசனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்து, 'எல்லாருக்கும் நேரம் வரும் தெரிஞ்சுக்கோ.. அது நல்லவருக்கே நிலைச்சிருக்கும் புரிஞ்சுக்கோ. கல்லாருக்கும் செல்வம் வரும் தெரிஞ்சுக்கோ.. அதை காப்பாற்ற தான் புத்தி இருக்கணும் தெரிஞ்சுக்கோ...' என எழுதினேன். அது அப்படியே கவுண்டமணிக்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர்தான் நல்லவராகவும் இருந்திருக்கிறார். வல்லவராகவும் இருந்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றி புத்திசாலித்தனமாக முன்னேறி இருக்கிறார்.

கவுண்டமணி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இன்று என்ன காட்சி, என்ன வசனம், என இதைத்தான் முதலில் பேசுவார். அதன் பிறகு காட்சிகளையும் வசனங்களையும் மேம்படுத்துவதற்காக சிந்தித்துக்கொண்டே இருப்பார். சினிமாவில் லயித்து இருப்பார்கள் என்று சொல்வார்களே, அது கவுண்டமணிக்கு தான் பொருந்தும். அவருடன் நான் அறையில் இருந்தேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. 'ஒத்த ஒட்டு முத்தையா என்பது கவுண்டமணியின் பிராண்ட் இந்த படத்தை தொடர்ந்து அவரை வைத்து தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் சினிமா மீது வைத்திருக்கும் மரியாதைக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார். 

சார்ந்த செய்திகள்