விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்திருக்க அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இதில் வாணி போஜன் பேசுகையில், “அஞ்சாமை எனக்கு ரொம்பவே முக்கியமான படம். நமக்கு ரொம்பவே நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்களை பற்றி அடிக்கடி விசாரிப்போம். அப்படி ஒரு உயிருக்கு உயிரான படம்தான் அஞ்சாமை. இந்த படத்தை ரொம்பவே நேசித்திருக்கிறேன். எந்த படத்தில் வேலை பார்க்கச் சென்றாலும் இந்த படம் பற்றிய ஞாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருக்கிறோம். இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவில்லை என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன். எனக்கு இப்படி ஒரு படம் கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். எனக்கு நடிக்க தெரியும் என இயக்குநரிடம் கூறினாலும் உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கும் என நாங்கள் ஒரு ஆடிஷன் செய்து கொள்கிறோம் என இயக்குநர் கூறினார். அப்போதே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என எனக்கு தோன்றியது. ஒரு நடிகையாக, ஒரு சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதராக, இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டார்கள்.. 100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.
விதார்த் பேசுகையில், “நடிப்புத்துறைக்கு வந்ததில் இந்த படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அழ ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் நான்கு விதமான காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் திண்டுக்கல்லில் இதன் படப்படிப்பையும் இடைவெளி விட்டுவிட்டு நடத்தினோம். படத்தின் புரொடக்ஷனிலும் உதவியாக இறங்கினேன். இதில் மம்முட்டியை நடிக்க வைப்பதற்காக அவரை நேரில் சென்று பார்த்து கதை சொல்லி அவருக்கும் பிடித்து போனது. ஆனால் தேதிகள் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் அதற்கு பதிலாக அடுத்ததாக ரகுமான் சார் வந்தார். ரொம்பவே பிரமாதமாக பண்ணி உள்ளார். நான் நடித்ததிலேயே கொஞ்சம் அதிக பொருட்செலவு ஆன படம் இது. அதன் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை பார்த்த அன்றே இதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள்.
நடிகராக இருப்பதற்கு நான் ஏன் பெருமைப்படுகிறேன் என்றால் மன்னரிடம் மக்கள் தங்கள் குறையை முதன்முதலாக நடனம், நாடகத்தின் மூலமாக தான் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் நடிக்க துவங்கியதே கூத்துப்பட்டறையில் தான். மக்களின் பிரச்சனைகளை நாடகங்களாக போட ஆரம்பித்தோம். சிறுவயதில் அம்மாவுடன் சென்று சாமி படங்களை பார்க்கும் போது மக்கள் சிலர் சாமி வந்து ஆடுவதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இசைக்காக ஆடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாடகத் துறைக்கு வந்ததும் தான் சினிமா மக்களை ஒருங்கிணைக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தப் படம் பார்க்கும்போது அனைவருமே தங்களை இதனுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். இது இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம். அப்படி ஒரு பிரச்சனையை என் படம் மூலமாக சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார்.