கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் நரேனை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவலை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
கார்த்திக் நரேன் பேசுகையில், “படத்தின் திரைக்கதை வேலைகளைப் பற்றி யோசிப்பதற்கு முன்பு படத்தின் கதையை எழுதிவிடுவேன். கதையின் தொடக்கமும் முடியும் தெரிந்துவிட்டால் அதற்கேற்ப என்ன திரைக்கதையில் சேர்க்க வேண்டுமோ அதைச் சேர்த்துவிடுவேன். திரைக்கதை என்பது பார்வையாளர்களுக்கும் இயக்குநருக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான். அந்த உரையாடலைத் திரைக்கதை வாயிலாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பார்வையாளர்களுக்கு இப்போது வெவ்வேறு ரசனையுடன் வருவார்கள் அவர்களுக்குப் புதிதாக ஒன்றைக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் இயக்குநராக எனக்கும் திருப்தியளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற சவால் எனக்கு இருக்கிறது.
என்னுடைய சினிமா பயணத்தின் தொடக்கத்தில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறேன். அதே சமயம் என்னுடைய தோல்விகளை எப்படிக் கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். தோல்வி வந்தவுடன் என்ன செய்யப்போகிறோம் என்ற பயம் இருந்தது. அந்த பயம் ஒரு படைப்பாளியை பின் இருந்து தாங்கி பிடிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வெறியுடன் சேர்ந்து இறுக்கமான சூழல் ஏற்படும். அதைத் தாண்டி அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய வேண்டும். ‘மிகவும் பர்சினலானது மிகவும் கிரியேட்டிவ்வானது’ என்று மார்ட்டின் ஸ்கோர்செஸ் சொன்னது போல் நிறங்கள் மூன்று படம் படைப்பாளியாக எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் தொடர்புடையது. இப்படத்தில் கற்பனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் தொடர்புபடுத்திக்கொள்ளகூடிய எமொஷ்னல் நிறைய இருக்கும். அதைப் பார்வையாளர்களும் தங்களுடன் தொடர்புப் படுத்திக்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கும் புதுமையாக இருக்கும்” என்றார்.