இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெரிய நடிகர் படங்களுக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 9 மணி சிறப்பு காட்சியுடன் வெளியான கங்குவா கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இது தொடர்பாக ஜோதிகா, “கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சில கோரிக்கைகள் வைத்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது. மற்ற மாநிலங்களில் அதிகாலையில் தொடங்கப்படுகிறது. அதனால் மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும்.
படம் வெளியாகிய இரண்டு வார காலத்துக்கு படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படங்களை அதிகாலையிலேயே பார்த்துவிட்டு, தமிழகத்தில் திரைப்படம் போடப்படுவதற்கு முன்னரே விமர்சனம் என்கிற பெயரில் யூடியூப் மூலமாக காலி செய்கின்றனர். தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூப்பர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை நாமே விதித்துவிட்டு அதை மீறி வருகிறோம். அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்யத் தடை வாங்கியதைக் கேள்விப்பட்டேன். அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் செய்ய வேண்டும். இந்த வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் படங்களும், சமீபத்தில் 'கங்குவா' படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது பாதிக்கப்பட்டது" என்றார்.