கே. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன், பி. வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நாய் சேகர், விலங்கு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.