Skip to main content

“சினிமாவில் முதல் ஷாட்டே ரேப் சீன் தான்” - வில்லன் நடிகர் விச்சு விஸ்வநாத் பகிரும் திரை அனுபவம்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

 Vichu vishwanath Shared movie experience 

 

இயக்குநர் சுந்தர்.சியின் ஆஸ்தான நடிகர், இணை இயக்குநர், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகைகளிலான கதாபாத்திரங்களில் அசத்திய நடிகர் விச்சு விஸ்வநாத் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

என்னுடைய இந்த நிலைக்கு எனக்கு அமைந்த நல்ல நண்பர்கள் தான் காரணம். சினிமாவுக்கு நான் வரக்கூடாது என்பதற்காகத் தான் என்னை என் குடும்பத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பினார்கள். ஆனால், கடவுள் முடிவு செய்த எதையும் நம்மால் மாற்ற முடியாது. முதலில் பாரதிராஜா சாரின் படத்தில் நடிப்பதாக இருந்து அந்த வாய்ப்பு நழுவியது. அதன் பிறகு விஜயகாந்த் சாரின் சந்தனக்காற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜயகாந்த் சாரிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது உடனடியாக ஏற்றுக்கொண்டார். 

 

அந்தப் படத்தில் நான் நடித்த சண்டைக்காட்சியில் விஜயகாந்த் சார் எனக்கு முழுமையாக உதவினார். அவரால்தான் அதில் நான் பாதுகாப்பாக நடிக்க முடிந்தது. மணிவண்ணன் சார் நம்மைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார். பொறுமையாக வசனம் சொல்லிக் கொடுப்பார். சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் ஷாட்டே ரேப் ஷாட் தான். நடிகை கௌதமியோடு அந்தக் காட்சியில் இணைந்து நடிக்கப் பயந்தேன். ஆனால், அவர் என் பயத்தைப் போக்கினார். முதல் படமே விஜயகாந்த் சார் போன்ற பெரிய நடிகரின் படம் என்பதால் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.

 

சந்தனக்காற்று படத்தில் சரத்குமார் சார் வில்லனாக நடித்தார். மிகவும் எளிமையானவர். எனக்கு மிகுந்த ஆதரவளித்தார். இன்றும் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். சுந்தர்.சியை முதன்முதலாக அவர் உதவி இயக்குநராக இருந்தபோது சந்தித்தேன். அப்போது ஆரம்பித்த நட்பு இன்று வரை தொடர்கிறது. என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவர். அவர் முதல் படத்தில் இயக்குநராக கமிட்டானவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். அந்தப் படத்தின் முதல் ஷாட்டில் நடித்தது நான்தான். 

 

அவரும் நானும் அடிக்கடி சந்திப்போம். நடிகர்களை அவர் சரியாகத் தேர்வு செய்வார். 'அன்பே சிவம்' படத்தில் கமல் சாரோடு நடித்தே ஆக வேண்டும் என்று அந்தக் கதாபாத்திரத்தை வாங்கினேன். சுந்தர்.சி படங்களில் நடிக்கும்போது கவுண்டமணி சாரோடு அதிகம் பணியாற்றியிருக்கிறேன். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சிரிப்பு நிறைந்திருக்கும். எப்போதும் அப்டேட்டடாக இருப்பார். ஆங்கிலப் படங்கள் அதிகம் பார்ப்பார். 

 

இன்றைய இளைஞர்களிடமும் கவுண்டமணி சாரின் நகைச்சுவை எடுபடுகிறது. சத்யராஜ் சாரும் கவுண்டமணி சாரும் இணைந்தால் அமர்க்களமாக இருக்கும். அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தில் மன அழுத்தமே ஏற்படாது. அந்த அளவுக்கு சிரித்துக்கொண்டே இருக்கலாம். அதேபோல் கார்த்திக் சார் ஒரு சிறந்த நடிகர். அவருக்குள் ஒரு இயக்குநரும் இருக்கிறார். ஆண்களையே லவ் பண்ண வைத்துவிடுவார். 8 மணி நேரத்தில் நடிக்க வேண்டியதை 3 மணி நேரத்தில் நடித்து முடித்து விடுவார். பெரிய திறமைசாலி.

 

சுந்தர்.சி உள்ளிட்ட எங்களின் நண்பர்கள் குழு அடிக்கடி சந்திப்போம். சினிமாவைத் தாண்டிய ஆத்மார்த்தமான நட்பு எங்களுடையது. கடந்த மாதம் தான் என்னுடைய மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைகளை என்னுடைய குடும்பத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விடுவேன். சுந்தர்.சி குடும்பமும் எங்களோடு மிகவும் நெருக்கம். இப்படி நல்ல நண்பர்களாலும் குடும்பத்தாலும் நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்