ஜி 5 ஓடிடி தளம் அமீர் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்', வசந்தபாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம்', ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எய்ட்', பிரகாஷ் நடிப்பில் 'ஆனந்தம்', ராதிகா சரத்குமார் நடிப்பில் 'கார்மேகம்', கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'பேப்பர் ராக்கெட்' உள்ளிட்ட 10 இணைய தொடர்களை (வெப் சீரிஸ்) வெளியிடவுள்ளது. இந்த தொடர்களை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், அமீர் வெற்றிமாறன், வசந்தபாலன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் 'நிலமெல்லாம் ரத்தம்' தொடரை அறிமுகம் செய்து வைத்த பின் பேசிய வெற்றிமாறன், "ஒரு நாள் அமீர் கூப்டு இந்த மாதிரி ஒரு ஐடியா இருக்கு இது பண்ணலாமான்னு பாருங்கன்னு சொன்னாரு. நானும் இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்கன்னு சொன்னேன். உடனே நீங்களே எழுதுங்கன்னு சொல்லிட்டாரு.சரி எழுதலாமேன்னு ஆரம்பிச்சதுதான் இந்த நிலமெல்லாம் ரத்தம் இணைய தொடர். வெப் சீரிஸ் வந்தது வந்து எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம். இதுல அவர்களுக்கு சுதந்திரம் நிறைய இருக்கு. திரைப்படங்களுக்கு அதிகபட்சம் 200 பக்கங்கள்தான் கதை எழுத முடியும். ஆனால் இணையத் தொடர்களுக்கு நிறைய எழுதலாம். தமிழில் திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்தே படம் எடுத்து பழகிட்டோம். ஆனால் வெப் சீரிஸ்ல நம்முடைய எல்லைகளைத் தாண்டி படம் பண்ணலாம்னு நம்புறோம்" எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமீர், "நாங்க இங்க வந்து பார்த்ததுல நிறைய (வெப் சீரிஸ்) இணைய தொடர்கள் அழகாகவும், கலர்ஃபுல்லாகவும், குடும்பம் சார்ந்தும் இருந்துச்சு,ஆனால் நாங்க அப்படி இல்லை. நாங்க வந்ததா ரத்தமும் சதையுமாகத் தான் வருவோம். அதுனாலதான் அதுக்கு நிலமெல்லாம் ரத்தம்னு பேரு வச்சிருக்கோம். சொல்ல முடியாததை இந்த இணையத் தொடர் மூலம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்றார்.
'நிலமெல்லாம் ரத்தம்' (வெப் சீரிஸ்) இணையத் தொடருக்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். அமீர் நடிக்கும் இந்த இணையத் தொடரை ரமேஷ் இயக்கவுள்ளார். யுவன் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் முறையாக யுவன் வெற்றிமாறன் இருவரும் இனைந்து பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.