Skip to main content

திராவிட இயக்க சினிமா குறித்து வெற்றிமாறன் கருத்து

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

vetrimaaran speech in kalaignar 100th year function

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, 'முன்னணி இயக்குநர்கள் பார்வையில் தமிழ்நாட்டின் இயக்கம் டாக்டர் கலைஞர்' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், வி.சி. குகநாதன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "பராசக்தி... அன்றைய காலகட்டத்தில் பெரும் கனவுகளோடு இருந்த இளைஞர்களால் எடுக்கப்பட்ட ஒரு படம். அன்றைய சூழலில் அவர்களுக்கு வசதி இல்லை, அதிகாரம் இல்லை, ஆட்சி இல்லை, வெறும் லட்சியங்கள் மட்டுமே இருந்தன. அதை வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். தமிழ் சமூக சூழலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டில் உள்ள மதம், சாதி அல்லது எந்த பிரிவினையை சொல்லியோ அரசியல் பண்ண முடியாதபடி செய்திருக்கிறது. அப்படி இன்றைய சூழலுக்கும் ஒரு முக்கியமான படமாக பராசத்தி இருக்கு. அதை இளைஞர்கள் அப்போது இருந்தவர்கள் தொடங்கி இன்றைய இளைஞர்களும் தொடர்ந்து நகர்த்தி வந்து கொண்டிருக்கிறார்கள். 

 

தொடர்ந்து சமூகத்தோடு உரையாடக்கூடிய அரசியல் படங்கள் வணிக ரீதியாக வெற்றி படங்களாக மாறக்கூடிய ஒரு சூழல் இங்க இருக்கு. இது எனக்கு தெரிஞ்சு எங்கேயும் நான் பார்த்ததில்லை. நிறைய இந்தி இயக்குநர்கள் உட்பட பல்வேறு இயக்குநர்கள் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இதை ஒரு வெற்றிப்படமாக மாற்றுகிறார்கள் என ஆச்சரியப்படுகின்றனர். இதற்கு நான் எப்போதும் சொல்வது தான். இங்க ஒரு பாரம்பரியம் இருக்கு. தமிழ் சினிமாவில் கலாச்சராமாக ஒரு விஷயம் நடந்திருக்கு. நடுவில் திராவிட இயக்க சினிமா வந்து, அது ஆட்சி அதிகாரமா மாறின பிறகு கொஞ்ச காலத்திற்கு அதுபோன்ற அரசியல் சினிமாக்கள் தேவையில்லை என்ற சூழல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அது ஒரு கட்டாயமாக இருக்கு. சினிமாவின் மூலம் அரசியலை விவாதிப்பது அவசியமா இருக்கு. அதில் மிக முக்கியமானவர்கள் கதையாளர்கள் தான். உலகத்தில் எல்லாவற்றையும் கதை சொல்லிகள்தான் செய்துள்ளார்கள். அதனுடைய தொடர்ச்சியான கதையாடல்கள் உரையாடல்களாக நிகழ்த்த வேண்டும். ஏனென்றால் கதைகளின் வாயிலாக பொய்கள் நிறைய கட்டமைக்கப்படுகிறது. நாம் ஒன்னு சொன்னால் அதை எப்படியெல்லாம் மாத்தி சொல்லலாம் என்பதற்கு அவுங்க கதைகள், ஊடகங்கள் எல்லாமே வச்சிருக்காங்க. 

 

நாம் நம் கதைகளை சொல்ல வேண்டும். நம் மக்களுக்காக சொல்ல வேண்டும். அதுக்கு ரொம்ப முக்கியமான கருவி சினிமா. சினிமாவை தொடர்ந்து மீடியா மூலமாக இந்த விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். அதனுடைய தொடக்கம் பராசக்தி. நாம் எல்லாரும் கத்துக்கிட்டு வருவது அங்கிருந்து தான். அந்த துணிச்சல், அந்த தெளிவு அதை கொண்டுபோய் சேர்ப்பதற்கான ஒரு வலிமை மிக்க படை என இது அத்தனையுமே நமக்கு தேவை. இருக்கிறதை இன்னும் வலிமைப்படுத்திக்க வேண்டும். சாதாரணமா ஒருவருடைய தலையை எடுத்துருவோம் என ஒருவர் சொல்வது, எப்போதுமே எந்த நிலையிலுமே அதை அனுமதிக்கக்கூடாது ஒவ்வொருத்தரும் நம்முடைய கதைகளை நாம் சொல்லுவோம். அதை எல்லோரிடத்திலும் கொண்டு போய் சேர்ப்போம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்