'ஜீவி' படப்புகழ் வெற்றி, ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் 'ஈரப்பதம் காற்று மழை'. இப்படத்தை அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கியுள்ளார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஸ்ரீராம் வெங்கடேஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது, “இந்தப் படம், மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம். வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது. இப்படம், மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில் இந்தக் கதை கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு வரும் நிகழ்வுகள் படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும் அதேசமயம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்ற வாழ்வின் நிலையற்றத் தன்மையை இந்த படம் உணர்த்தும்.
முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை. அது தனி நபரின் உணர்வைப் பற்றியது என்ற எண்ணத்தையும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதன் விளைவுகளை பொறுத்ததே வாழ்க்கை என்பதை இந்தப் படம் நமக்குத் தருகிறது. படத்தின் ஒவ்வொரு விவரமும் தனி கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கதை நடைபெறுவதால், முடிந்த அளவுக்கு லைவ் லொகேஷனில் அதன் உண்மைத்தன்மையுடன் படம் பிடித்து இருக்கிறோம்” என்றார்.