வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இசைவெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், "இந்தப் படம் சிம்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். பஞ்சு சுப்பு அவர்கள்தான் இந்தப் படத்தை ஆரம்பித்துவைத்தார். அதன் பிறகு, நான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சுப்பு மூவரும் சிம்பு சாரை பார்த்தோம். நான் அவரிடம் கதை சொல்லவில்லை. ஒரு ஐடியா மட்டும் சொல்லிவிட்டு சிலம்பரசனின் மாநாடு என்று படத்தின் பெயரைச் சொன்னேன். அவருக்கு மாநாடு என்ற பெயரைவிட அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தின் பெயர் மிகவும் பிடித்திருந்தது. சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்த கதாபாத்திரங்கள்தான் நடிக்க கடினமாக இருக்கும். இவர்கள் இருவருக்கும் இடையேயான 7 நிமிட காட்சி ஒன்று இருக்கும். அந்தக் காட்சியை எப்போது பார்த்தாலும் எனக்கு கண்ணீர் வரும். சிம்பு பிறவியிலேயே நடிகர் என்பதை அந்தக் காட்சி நிரூபிக்கும். அந்தக் காட்சியை இப்போதே இங்குள்ள அனைவருக்கும் காட்டவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அந்தக் காட்சியை யுவன்சங்கர் ராஜா தன்னுடைய இசையால் ஒருபடி உயர்த்தியுள்ளார். யுவன்சங்கர் ராஜா - சிம்பு கூட்டணி என்பது அனைவருக்குமே ஸ்பெஷலான கூட்டணி.
எந்த பிறந்தநாள் ட்வீட் போட்டாலும் சரி... ஏதாவது இரங்கல் ட்வீட் போட்டாலும் சரி... சார் மாநாடு அப்டேட் என்று சிம்பு ரசிகர்கள் கேட்பார்கள். அந்த அளவிற்கு அவர் மீது காதல் கொண்டுள்ளனர்.பயங்கரமா இன்டர்நேஷனல் லெவலுக்கு ஒரு கான்செப்ட் எடுத்துட்டீங்க... ஆனால், இது கரகாட்டக்காரன் ஆடியன்சுக்கும் புரிய வேண்டும் என்று எப்போதுமே எஸ்.ஜே.சூர்யா என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். சிம்புவிற்கு எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இடையே நடப்பதுதான் இந்தப்படம். இந்தப் படத்தை எழுதுவதைவிட தயாரிப்பது மிகவும் கஷ்டம். மேன்மேலும் பல பெரிய படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்துகள்" எனக் கூறினார்.
வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சு, அந்தக் காட்சி குறித்து சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.