Skip to main content

'நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்' - நடிகர் வீரா

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
veera

 

 

 

நடிகர் கவுண்டமணியின் பிரபல வசனமான 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக நடுநிசி நாய்கள், ராஜதந்திரம் புகழ் வீரா நடித்துள்ளார். மேலும் நாயகியாக மாளவிகா நாயர் நடிக்க, ரோபோ ஷங்கர், பசுபதி, ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிவடைந்து விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து நடிகர் வீரா பேசும்போது... "ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்" என்றார். 

 

 

 

மேலும் இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இதுகுறித்து பேசும்போது... "நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல்  நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்கு தான் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'வின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி. இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது" என்றார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்