மதுரா டாக்கீஸ் தயாரிப்பில் கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வட்டார வழக்கு’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம், வருகிற 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது இயக்குநர் கண்ணுசாமி ராமச்சந்திரன், “இளையராஜா சாருக்கு நல்ல பழக்கமுள்ள மாணிக்க நாராயணன் சார் ஆபிசுக்கு போனேன். அவரிடம் படத்தை பற்றிய விவரத்தை சொல்லிவிட்டு, பின்னணி இசைக்காக வந்திருப்பதாக சொன்னேன். அவரிடம் படம் பாருங்க. பிடிச்சிருந்தா மட்டும் உதவி பண்ணுங்க. இல்லைன்னா வேண்டாம் என்றேன். பிறகு மாணிக்க நாராயணன் படம் பார்த்துவிட்டு ராஜா சாருக்கு ஃபோன் பண்ணினார். அவரிடம், ‘சார் உங்களுக்கான படம். பின்னணி இசையை மட்டுமே நம்பி உள்ள படம். உங்களின் இசை வந்துட்டா இந்த படம் உயிர் பெற்றுவிடும்’ என்றார். ராஜா சாரும் ஒரு நாளைக்கு கூட்டிட்டு வா என்றார்.
அப்புறம் ராஜா சாரிடம் போனோம். அவர் படம் பார்த்தார். முடித்தவுடன் என்னை பார்த்து, நாளைக்கே பின்னணி இசையை ஆரம்பிச்சிடலாமா எனக் கேட்டார். எங்கிட்ட சுத்தமா பணமில்லை. நண்பர்களிடம் குறிப்பாக ராஜா சார் ரசிகர்களிடம் பணம் கேட்டு வாங்கிவிட்டேன். சின்ன பட்ஜெட் படம் என்பதால் அடிப்படை செலவு மட்டும்தான் ராஜா சார் கேட்டிருந்தார். அதில் 60 சதவீதம் ரெடி பண்ணிட்டேன். 40 சதவீதம் இல்லை. செக்கை அவரிடம் கொடுத்தேன். செக்கையும் என் கண்ணையும் பார்த்தார். ‘எவ்ளோ பேரை வழி அனுப்பிச்சிருக்கேன். வா... பார்த்துக்கலாம்’ என்றார். உடனே காலில் விழுந்துவிட்டேன்” என உருக்கமுடன் பேசினார்.