![Vasanthabalan](http://image.nakkheeran.in/cdn/farfuture/yz94QuZd2M-dtuDroeVREQH15xmBmsUWZDx6EPEMvEA/1632224867/sites/default/files/inline-images/60_40.jpg)
மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இத்தேர்வு முடிவுகள் குறித்த அச்சம் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது போன்ற தவறான முடிவை எடுக்கக்கூடாது என திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் மாணவர்களை அறிவுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் வசந்த பாலன் தோல்வியை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்றிரவு என் மகன்கள் ஒருத்தரை ஒருத்தர் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக இருந்தேன். ஏன் டாடி சோகமா இருக்கீங்க என்று இளைய மகன் கேட்டான். எனக்குள் நானே கேட்டேன்... நான் ஏன் சோகமாக இருக்கிறேன்… நீட் தேர்வையொட்டி பிஞ்சுப்பூக்களின் தற்கொலையும் கவிஞன் பிரான்ஸிஸ் கிருபாவின் மரணமும் என்னை ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு செய்தவண்ணம் இருக்கிறது.
பொதுவாக மாணவர்களுக்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விழைகிறேன். என் முதல் படம் தோல்வியுற்றபோது தோல்வி எனக்கு கற்றுக்கொடுத்தப் பாடம் எட்டாண்டுகள் நான் உதவி இயக்குநராக இருந்தபோது ஒரு நிமிடமும் கற்றுக்கொள்ளாத மிகச்சிறந்த பாடம். புரியாத பாடங்களை வாத்தியார் எழுதி பாருங்கள் புரியும் என்று சொல்வார்களே அதே போன்று எனக்கு பிடித்த உலக சினிமாக்களின் திரைக்கதையை எழுதிப் பார்ப்பேன். காட்சிவாரியாக ஒன்லைனராக எழுதி வைத்து திரைக்கதைன்னா இப்படியா என்று மனதில் பதியவைத்துக்கொண்டேன். நான்காண்டுகள் முழுக்க முழுக்க அடுத்து இயக்கப்போகும் படத்திற்காக என்னை தயார் செய்து கொண்டேன். எங்கெல்லாம் தவறு நிகழ்கிறது அதை நான் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்துக்கொண்டேன். எங்கெல்லாம் நான் எப்படி செயல்படவேண்டும் என்று ஒத்திகை பார்த்தேன்.
4 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்பு வெயில் படம் இயக்க வாய்ப்பு வந்தபோது நெருங்கிய நண்பர்கள், வசந்தபாலன் என்பது தோல்வியுற்ற பெயர் ஆகவே உங்களின் பெயரை மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் என்றனர். நான் உறுதியாக மறுத்துவிட்டேன். முதல் படத்தில் தோல்வியைத் தழுவிய வசந்தபாலன்தான் இரண்டாவது படத்தில் வென்றுவிட்டான் என்பது உலகிற்கு தெரியவேண்டும் அதனால் யார் சொன்னாலும் நான் என் பெயரை மாற்றவேமாட்டேன் என்று உறுதிபட கூறினேன். தேர்வைப் பார்த்தோ தோல்வியைப் பார்த்தோ ஒருநாளும் நாம் பயப்படக்கூடாது. அவனே நம் வாழ்வின் மிகச்சிறந்த ஆசான். அவனே நம்மை வெற்றியை நோக்கி வழிநடத்தும் மிகச்சிறந்த நண்பன்.
தற்கொலை என்பது உன்னை நீ தண்டிப்பது மட்டுமல்லாமல் அடுத்தாண்டு தேர்வு எழுதப்போகும் லட்சக்கணக்கான மாணவர்களையும் சமூகத்தையும் சேர்த்து தோல்விப்பயத்தில் தள்ளுகிறாய். இந்த வாழ்வைப் படிக்கத்தான் இந்த பூமிப்பந்தில் பிறந்தாய். உனக்கு வழங்கப்பட்ட வாழ்வு மகத்தானது. அதில் அவ்வப்போது ஏற்படும் சிறு இடும்பைப்பற்றி அதாவது சிறு துன்பம் பற்றியும் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என வள்ளுவர் தாத்தா என்ன சொல்கிறார் என்றால், இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.