Skip to main content

"நான் உடைந்துபோய் நின்றபோது கைகளைப் பிடித்த ஜி.வி. பிரகாஷ்" - நெகிழ்ந்த வசந்தபாலன்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Vasantha Balan

 

வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்’ திரைப்படம், வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படக்குழுவினருடனான பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், "எமனோடு கைகுலுக்கிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்பதாக நினைக்கிறேன். ஐ.சி.யு. வார்டுக்குள் சென்றபோது நிச்சயம் மீண்டு வந்துவிடுவேன் என நம்பினேன். அதற்குக் காரணம் கலை. ஐ.சி.யு. வார்டில் இருந்தபோது தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். கலை ஒரு மனிதனை விடுதலை செய்யும் என்பதைப் புத்தகத்தில் படித்துள்ளேன். அதை முதன்முறையாக ஐ.சி.யு. வார்டில் நான் உணர்ந்தேன். இந்தப் படம் வெளியாகும் என்று நான் நம்பவேயில்லை. இந்தப் படத்தை ஒருகட்டத்தில் நான் மறந்துவிட்டேன். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு வலியை சுமந்துகொண்டே அலைய முடியாது. ஒவ்வொரு தயாரிப்பாளரிடம் போகும்போதும் அந்தப் படம் எனக்கு நடக்காது. யார் தடுக்கிறார்கள் என்றே தெரியாது. கடந்த ஆறு வருடங்கள் பெரும் போராட்டமாக இருந்தது. அந்தப் போராட்டங்களுக்கு நடுவேதான் பி.டி. செல்வகுமார் சாரை சந்தித்தேன். அவர்தான் இந்த வாய்ப்பை ஸ்ரீதரன் சாரிடம் இருந்து எனக்கு வாங்கிக்கொடுத்தார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஓ.எம்.ஆர். பற்றி எனக்குக் கதை எழுதிக்கொடுத்தார். அந்தக் கதையைப் படமாக்குவதற்காக அந்த வீதிகளுக்குச் சென்றேன். அந்த வீதியின் ஒருபுறம் சொர்க்கம் போல இருக்கும். மறுபுறம் நரகம்போல இருக்கும். வானுயர இருக்கின்ற கட்டடங்களை நாம் அழகு என்று கொண்டாடுகிறோம். ஆனால், அந்தக் கட்டடத்தை உருவாக்கிய ஆதிக்குடிகள் அந்த நகரத்தைவிட்டு குப்பைபோல தூக்கி வீசப்படுகிறார்கள். இது சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. 18 வயது சிறுவன் பிக்பாக்கெட் அடித்தான் என்ற செய்தியை நீங்கள் இனி எளிதாக கடந்துவிடக்கூடாது என்பதை இந்தப் படத்தில் பேசியுள்ளேன். நகரோடி என்ற புது வார்த்தையைத் தமிழுக்கு அறிவு கொண்டுவந்துள்ளார். நாடோடி, ஊரோடி, காலோடி ஆகிய வார்த்தைகள் தமிழில் இருந்தாலும் நகரோடி என்ற வார்த்தை புதியது. 

 

ad

 

ஐ.சி.யு.வில் நான் இருந்தபோது ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்று நர்ஸிடம் கூறினேன். அந்தக் குரல் ஐ.சி.யு. வார்டு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போதுதான் புரிந்தது, இது நோயாளியின் குரல் அல்ல; விடுதலையின் குரல் என்று. உடனே இதை ஐ.சி.யு.வில் இருந்தே எழுதி ஜி.வி. பிரகாஷிற்கு அனுப்பினேன். ‘சார் நீங்க ஐ.சி.யு.வில் இருக்கீங்க’ என்றார். ‘இந்த வேலையைச் செய்தால் நான் மகிழ்வேன்’ என்று கூறியதும் உடனே மெட்டமைத்து எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அதை உடனே அறிவுக்கு அனுப்பினேன். இந்தப் பாடலை அவரால்தான் எழுத முடியும். 

 

‘ஜெயில்’ என்று பெயர் வைத்தவுடன் ஜெயிலைப் பற்றிய படமா என்று கேட்டார்கள். ஜெயிலைப் பற்றி படம் எடுத்தால் ஜெயில் என்று பெயர் வைக்க வேண்டியதில்லை. ‘ஜெயில்’ என்பது படிமம். நீங்கள் எங்கெல்லாம் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கிறீர்களோ அங்கு உங்கள் காலடியில் புது ஜெயில் முளைக்கிறது. 

 

15 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.வி.யின் விரல்களைப் பிடித்து இந்த மேடைக்கு நான் அழைத்துவந்தேன். இன்று ஜி.வி. அடைந்துள்ள உயரம் மிகமிகப் பெரியது. கதாநாயகன் இல்லாமல் நான் உடைந்துபோய் நின்றபோது என் கைகளைப் பிடித்த ஜி.வி.யின் கைகளை நண்பனின் கைகளாக நான் பார்த்தேன். இந்தப் படத்திற்கு அவர் கொடுத்த உழைப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம். சில காட்சிகளில் அவர் நடித்ததைப் பார்க்கும்போது மிகச்சிறந்த நடிகனை கண்டுணர்ந்ததுபோல இருந்தது" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்