Skip to main content

“நாட்டு நலனில் சமரசம் செய்து கொள்ளாதவர் சங்கி” - வானதி ஸ்ரீனிவாசன்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
vanathi srinivasan about rajini sanghi issue

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை லைகா தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி கடந்த 26 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி சங்கியாக இருந்தால், அவர் லால் சலாம் போன்ற படத்தில் இருந்திருக்க மாட்டார். ஒரு மனிதநேயவாதியால் மட்டும்தான் இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க முடியும்” என்றார்.

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை. லால் சலாம் படத்தில் மதநல்லிணக்கத்தை சொல்லியிருக்காங்க” எனப் பதிலளித்தார். 

இதனிடையே பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், “சங்கி என்ற சொல்லை எங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக நிற்கிறவங்க, இழிவுபடுத்தும் விதமாக பயன்படுத்தி வராங்க. அதே வேளையில் நான் பெருமையுள்ள சங்கி என்றும் சில பேர் சொல்றாங்க. அதனால் சங்கி என்ற வார்த்தைக்கு நாங்க விளக்கம் சொல்ல முடியாது. அப்படி சொல்ல வேண்டுமென்றால், இந்த நாட்டை நேசித்து, இந்த நாட்டின் நலனில் சமரசம் செய்து கொள்ளாமல், யாராக இருந்தாலும் அவர்களை இந்திய நாட்டு குடிமக்கள் சங்கி என சொல்வது பெருமைன்னு சொல்லிக்குவோம்” என்றார். 

மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியிடம் பாஜக ஆதரவு கேட்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ரஜினி மட்டுமல்ல கமல்ஹாசன், விஜய் என எந்த நடிகராக இருந்தாலும் எல்லாரிடமும் ஆதரவு கேட்பது எங்கள் வேலை. கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவர்களது விருப்பம்” என்றார்.

சார்ந்த செய்திகள்