
எச். வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுமுதல் தற்போதுவரை படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்துவருகிறது. ஒரு கட்டத்தில், சமூக வலைதளங்களில் படக்குழுவினரிடம் அப்டேட் கேட்டு விரக்தியடைந்த அஜித் ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் படத்திற்கு தொடர்பில்லாத நபர்களிடம் 'வலிமை' அப்டேட் கேட்க ஆரம்பித்தனர்.
இது ஒருவகையான ட்ரெண்டாக மாற, ரசிகர்களின் இந்தச் செயலுக்கு நடிகர் அஜித் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு, இந்தச் செயலை அஜித் ரசிகர்கள் தவிர்த்துவந்தனர். இந்நிலையில் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இந்த மாதம் (ஜூலை) 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் - எச். வினோத் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.