பாபி சிம்ஹா, குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். 2014-ல் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தில் 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார். கடைசியாக 'மகான்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'தடை உடை' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மிஷா நராங் நடிக்கிறார். பிரபு, செந்தில், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முத்ராஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத ஆதிஃப் என்பவர் இசையமைக்கிறார். வைரமுத்து படத்திற்கு தலைப்பு வைத்து இந்த விழாவை தொடங்கி வைத்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து தெரிவித்துள்ளார். இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மே-5 ஆம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்கள்.
பாபி சிம்ஹா நடிக்கும்
புதிய படத்திற்குத்
‘தடை உடை’ என்று
பெயர் வைத்தேன்
படப்பிடிப்பைத்
தொடங்கி வைத்தேன்
கலைஞர்களுக்கும்
தொழில்நுட்பக்
கலைஞர்களுக்கும்
மாலைசூட்டி மகிழ்ந்தார்கள்
சின்னச் சின்னக்
கொண்டாட்டங்களே வாழ்க்கை@actorsimha | @Rohinimolleti pic.twitter.com/hte6X73i0r— வைரமுத்து (@Vairamuthu) May 2, 2022