இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் பல படங்களில் பணியாற்றிய நிலையில் பல வரிடங்களுக்கு முன்னால் சில கருத்து வேறு பாடு காரணமாக இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இதனிடயே இளையராஜா மற்றும் இசை நிறுவனங்களுக்கு இடையேயான காப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த போது, , “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை நீதிபதி வைத்தார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை ஜூன் இரண்டாம் வாரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த சூழலில் ‘படிக்காத பக்கங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, “ஒரு பாடலில் இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு. இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அதற்கு பாட்டு என்று பெயர். ஆனால் சில நேரங்களில் இசையை விட மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியை விட இசை உயர்ந்ததாகவும், திகழுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்றார்.
இதையடுத்து வைரமுத்து பேச்சிற்கு இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “கவிஞர் வைரமுத்து எங்களால் தூக்கிவிடப்பட்டவர். எங்களால் லிஃப்டில் ஏறி பாட்டு எழுதியவர். அவர் உக்கார்ந்த சேரை தூக்குப் போட்டு மிதிப்பது போல பேசியிருக்கார். மனுஷனுக்கு எப்போதுமே ஒரு நன்றி வேண்டும். மருதராஜா, பாரதிராஜா, இளையராஜா, இவர்கள் இல்லையென்றால் நமக்கு கிடைச்சிருக்காதே, என நினைத்து பார்த்தால் இது மாதிரி அவர் பேசியிருக்கமாட்டார்.
ஏனென்றால் அவர் இப்போது வாழும் வாழ்வை, எடுத்த பேரை எல்லாம் நினைத்துப் பார்தோம் என்றால், அவர் எதிர்காலமே ஜீரோ ஆகியிருக்கும். வைரமுத்து எழுதியதை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு, இளையராஜா பொன் மாலை பொழுது வரிகளை பாராட்டினார். வைரமுத்து எழுதியவுடனே நானும் கைதட்டி பாராட்டினேன். அவர் திறமையுள்ள மனிதர் தான். என்னமோ தெரியவில்லை, கர்வம் வந்துவிட்டது. இதே கர்வம் இளையராஜாவிடம் தொடர்ச்சியாக எழுதியிருந்தால் வந்திருக்காது. ஏனென்றால் அவர்கள் நண்பர்களாக இருந்திருப்பார்கள். அதை பார்த்து நாங்கள் ரசித்திருப்போம். அப்படி இருந்த நட்பை அவர் இப்படி கொச்சைப் படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. இசைக்கு பாடலா, அல்லது பாடலுக்கு இசையா என கேட்கிறார். வைரமுத்துவை பாடல்களை பொறுத்தவரை நல்ல கவிஞர் என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால் நல்ல மனுஷன் கிடையாது. அவர் இளையராஜாவை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே பேசி வருகிறார். அவருக்கு ஒரே தம்பியாக நான் இருக்கிறேன். இளையராஜவை பற்றி குறை சொன்னால் எனக்கு என்ன ஆகும் என தெரியாது. அதனால் அவர் கொஞ்சம் அடக்கியிருக்க வேண்டும். அதற்கு ஆள்ளில்லாததனால் தான் அவர் பேசிக் கொண்டு வருகிறார்.
ஒரு கவிஞனை நல்லவராக கொண்டு வரவேண்டும் என்று சொன்னால், இந்த நிலமாகிய ராகம், அந்த ராகத்திற்குள் நீங்கள் கட்டின கட்டிடங்கள் தனி தனி. நானும் என் பாடல்களின் மூலம் ஒரு 2000 வீடுகள் கட்டியிருப்பேன். அதில் பெருமை எடுத்துக் கொள்ள நான் வரவில்லை. அண்ணனை சொன்னதினால், கேட்க வந்திருக்கிறேன். இனிமே அவர் இளையராஜாவை பற்றி பேசக்கூடாது. அப்படி பேசினார் என்றால் நல்லாயிருக்காது. என்னுடைய பதிவிற்கு அவர் பதில் கூட சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் நான் இன்னும் பேச வேண்டியிருக்கும்.
ஆகவே வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவை, அவரின் போட்டோவை வைத்து தினமும் வைரமுத்து கும்பிட வேண்டும். இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து பெயரே இன்றைக்கு இருந்திருக்காது. ஒவ்வொரு கட்டிடத்தையும் பாடலாக வைத்தோம் என்றால் நிலம் என்பது இசை. நிரந்தரமாக இருக்கக் கூடியது. ஆனால் இப்போது கட்டிடம் கட்டுவதற்கு இளையராஜா இடம் தரமாட்டுகிறார் என்ற ஆதங்கம் உங்களிடம் தெரிகிறது. அது நடக்காது. நான் கூட அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது இளையராஜாவை கோவப்படுத்துகிற அளவிற்கு ஆகிவிடுமே என்பதால் அதுப் பற்றி பேசுவதே இல்லை.
இன்றைக்கு தன்னை தானே புகழ்ந்து கொண்டு பேசக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள். பாராதியார், பாரதிதாசன், மும்மூர்திகள், கண்ணதாசன், வாலி என யாருமே அப்படி கிடையாது. இப்படி இருந்தவர்கள் வாழ்ந்த இந்த சினிமா உலகத்தில், தான் மட்டும் தான் என கவிப்பேரரசு என்ற பெயர் வாங்கியவர் சொல்லி வருகிறார். அவருடைய பிள்ளைகள் நல்ல வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இனிமேல் வைரமுத்து இளையராஜா பற்றி சின்ன குற்றமோ குறைகளோ சொல்வதாக இருந்தால், அதற்குறிய விளைவுகளை வேறு மாதிரி சந்திக்க நேரிடும். நன்றி சொல்ல முடியாது. இசை வழியில் எங்க அண்ணன் போவது போல உங்க வழியில் நீங்க போங்கள். உங்களுக்கு என்ன குறைச்சல், கலைஞர் கொடுத்த வீடு இருக்கு அதில் ஜம்முனு இருக்கீங்க” என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.