இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சமீபத்திய விசாரணையின் போது, “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, “இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இதை புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன், வைரமுத்துவை கடுமையாக சாடி எச்சரித்திருந்தார். இதன் பிறகு இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியது. இதையடுத்து வைரமுத்துவிடம் ஒரு நிகழ்ச்சியில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் வைரமுத்து.
இந்த நிலையில் புதுமுகங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பனை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இளையராஜா விவகாரம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முடிந்த கதை தொடர வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள். இது குறித்து பேசுவது பண்பாட்டு ரீதியாக உயர்ந்ததில்லை என்பது எனது கருத்து. அவரை பிரிந்த பிறகும் 30 ஆண்டுகளுக்கு மேல் நல்ல பாடல்களை நான் கொடுத்து கொண்டிருக்கிறேன். இன்னுமும் நிறைய பாடல்கள் வரும்.
நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்புவதில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. உண்டாக்கப்பட்ட சர்ச்சைகளிலிருந்து நான் வெளியேற விரும்புகிறேன். ஆனால் காலம் சர்ச்சைகளை முடிப்பதற்கு விரும்பவில்லை என தெரிகிறது. சமூக சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டு குளிர்காய நினைக்கிறது. ஆனால் தனி மனிதர்கள் சர்ச்சைகளை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறார்கள். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன். சர்ச்சைகளோடு விலக நினைக்கிறேன்” என்றார்.