
தன் உடல்மொழியாலும் டைமிங் வசனங்களாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் பின்பு ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், பொழுதுபோக்கு பிரிவின் கீழ் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் துணை நடிகர் கோகுலுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை பாராட்டும் வகையில் சிறப்பு விருதும் தரப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கி வரும் இந்த அமைப்பு முன்னதாக நடிகர் ராகவா லாரன்ஸிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் வடிவேலு பட்டம் பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வடிவேலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .