
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி புதிதாக நடித்துள்ள படம் ‘ஹிட் - 3’. இப்படத்தில் கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்க கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது படக்குழு. இதில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் நானி தனது உடையில் தமிழ்நாடு என வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பலரது கவனத்தை ஈர்த்தது. நிகழ்வில் அவர் பேசுகையில், “நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 - 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு - தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள். அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும்” என்றார். அவரிடம் மே 1 சூர்யா நடித்த ரெட்ரோ படமும் வெளியாவதால் இரு படத்துக்கும் போட்டி எப்படி இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு போட்டி கிடையாது. கொண்டாட்டமாக இருக்கும். இரண்டு படக்குழுவினருமே படத்தை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடப்போகிறோம். ஆனால் தமிழ் ஆடியன்ஸுக்கு ரெட்ரோ தான் முதல் சாய்ஸாக இருக்கும். அது நல்ல தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். சூர்யா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. கார்த்தி மீதும் கூட. படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. வீக்கெண்டை என்ஜாய் பண்ணுவதற்கு இரண்டு படங்கள் இருக்கிறது. ரெட்ரோ படத்தை கொண்டாடியதற்குப் பிறகு ஹிட் 3 படத்தை கொண்டாடலாம். இதுவும் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என நம்பிக்கை தருகிறேன்” என்றார்.