
விஜய், ஜெனிலியா நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருந்திருந்த இப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் பின்பு இப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படம் கடந்த 18ஆம் தேதி ரீ ரிலிஸானது. விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் நடன இயக்குநர் ஷோபி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தாணு பேசுகையில், “விஜய்யிடம் எப்படி சச்சின் திரைப்படம் சென்றது என்பதை கூறினால் ஒரு நாள் போதாது. விஜய் திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக விஜய்யிடம் இயக்குநர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் குஷி போன்ற கதை ஒன்றை கூறினார், நீங்கள் கேட்கிறீர்களா? என்று கேட்டேன். அதன் பிறகு ஜான் மகேந்திரன் விஜய்யிடம் கதை கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றறை மணி நேரத்திற்கு பிறகு விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, 'கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று' கூறினார்.
உலகமெங்கும் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது, இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். 'சச்சின்' மறுவெளியீடு செய்த மறுநாள் என் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றேன். அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், அவர்களை உயர்த்தி ஊக்குவிக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். 'சச்சின்' திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப்பெரிய காரணம். மேலும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி” என்றார்.
பின்பு அடுத்து அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவின் காக்க காக்க, ரஜினியின் கபாலி மற்றும் விஜய்யின் தெறிஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக சொன்னார். இதில் கபாலி மற்றும் தெறி அடுத்த ஆண்டு ரீ ரிலீஸாகும் என தெரிவித்தார்.