![vadivelu](http://image.nakkheeran.in/cdn/farfuture/JcwH5txpCOkffV_FalgDzojRs7_OEkc6aDweHD0rDeY/1630150225/sites/default/files/inline-images/30_20.jpg)
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். 23ஆம் புலிகேசி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்த படக்குழு, கடந்த 2017ஆம் ஆண்டு அதற்கான பணிகளைத் தொடங்கியது.
இரண்டாம் பாகத்திற்கு 24ஆம் புலிகேசி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தப் படக்குழு, சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பைத் தொடங்கியது. படப்பிடிப்புத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே படத்தின் நாயகன் வடிவேலுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஒதுக்கிய தேதியில், படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வடிவேலு காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷங்கர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த போதிலும், இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதன் மூலம் வடிவேலுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீங்கியுள்ளது. கடந்த சில வருடங்களாக வடிவேலுவை திரையில் பார்க்க முடியாமல் தவித்துவந்த தமிழ் காமெடி ரசிகர்களுக்கு இத்தகவல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், 24ஆம் புலிகேசி திரைப்பட சர்ச்சை முடிவுக்கு வந்தது குறித்தும், மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது குறித்தும் தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த வடிவேலு, "நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது. எனக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், திரையில் தோன்றி மீண்டும் நடிக்க இருப்பது, முதன்முதலில் நடிக்க வாய்ப்பு தேடியபோது இருந்த உணர்வைத் தருவதாகக் கூறிய வடிவேலு, இரு படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறினார்.