நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்திருந்த நிலையில், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு நேற்று மாலை சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாரிமுத்து மறைவு குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசியது, "மாரிமுத்துவுக்கு இப்படி ஆகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. நேற்று தான் என் தம்பிக்கு 13வது நாள். அதற்கு வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த செய்தி கேட்டேன். நான் கூட சீரியலில் தான் அது போன்ற காட்சி எடுத்துள்ளார்களோ என நினைச்சேன். ஆனால் உண்மையிலே இறந்துவிட்டதாக கேள்வி பட்டேன். ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு. ஏன் இப்படிலாம் நடக்குதுன்னே ஒண்ணுமே புரியல.
ராஜ்கிரண் அலுவலகத்தில் நானும் அவரும் நெருக்கமா பழகினோம். கண்ணும் கண்ணும் படத்திற்கு அவர் தான் டைரக்டர். அதில் வரும் 'அடிச்சிகூட கேப்பாங்க அப்பையும் சொல்லிராத...' என்ற காமெடி அவர் உருவாக்கியது தான். கிணத்தை காணோம் என்ற காமெடியும் அவர் எழுதினது தான். பெரிய நகைச்சுவை சிந்தனையாளர். சமீபத்தில் கூட அவர் குடும்பத்தோடு பேசும் பேட்டியை பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தார். ஆனால் திடீர்னு... இது தான் உண்மையிலே சினிமாவில் பேரதிர்ச்சி. கதாபாத்திரமா அப்படி இருப்பார். நிஜத்தில் ரொம்ப அருமையான ஆளு. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என என்றார்.