தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில், மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் தூத்துக்குடியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் களத்தில் இருந்து உதவி செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மீட்பு பணிகள் குறித்து தொடர்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனிடையே மாரி செல்வராஜ் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அது விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது. அதற்கு பதில் தரும் விதமாக, “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் மீது எழுந்த விமர்சனம் குறித்து வடிவேலு பேசியுள்ளார். மிக்ஜாம் புயலில் காணாமல் போன மரங்களுக்கு ஈடாக 500 மரங்கள் கொடுக்கும் விழா சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “இன்றைக்கு அரசாங்கம் எவ்ளோ துயரங்களை சந்திச்சுட்டு வருது. சென்னையில புயல் வந்துச்சு, அதை அரசியல் ஆக்கிட்டாங்க. ஆனால் அங்க புயல் வந்துச்சு. அதை அரசியல் ஆக்க முடியல. ஏன்னா, தண்ணி பிச்சுக்கிட்டு போகுது.
அதுல ஒருத்தன் டைரைக்டர் ஏன் அங்க போறான்... அவருக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்னு சொல்றான். அது அவர் ஊரு. பள்ளம் எங்க இருக்கு, மேடு எங்க இருக்கு-னு அவருக்கும் தான் தெரியும். ஏன் போகக்கூடாதா. என் ஊர்ல வெள்ளம் வந்தா நான் போகாம வேற யார் போறது. இதுல இன்னொருத்தன் சொல்றான், உதயநிதி எதுக்கு அங்க போறாருனு. அவர் போகனும். போயி மக்களோடு மக்களா நான் இருக்கேன்னு இணைஞ்சு வேலை செய்யனும். அமைச்சர், எம்.எல்.ஏ என எல்லாமே அங்க போயிருக்காங்க. இதுல அரசியல் பேச நான் விரும்பல. இது அரசியல் கிடையாது. எல்லாருக்குமே பங்கு இருக்கு. அமெரிக்காவில் இருந்தா மாரி செல்வராஜ் வந்திருக்கார்” என்றார்.