தமிழ் சினிமாவில் 'தீரன்', 'என்.ஜி.கே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இப்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'அயலான்' படத்திலும் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்கிறார். இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேங் காட்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘தேங் காட்’ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த ட்ரைலரை பார்க்கையில் கதாநாயகன் இறந்த பிறகு சொர்க்கத்தில் செல்கிறார். பின்பு அங்கு நடக்கும் நிகழ்வுகளை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. அந்த சொர்க்கத்தில் அஜய் தேவ்கன் சித்திர குப்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போல் பார்க்கமுடிகிறது. மேலும் ட்ரைலரின் கடைசியில் அஜய் தேவ்கன் நகைச்சுவை சொல்கிறேன் என்று சொல்லி ஒரு வசனம் பேசுகிறார். அந்த வசனம் தொடர்பாக உ.பி மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அஜய் தேவ்கன் பேசும் வசனத்தில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக வழக்குத் தொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜான்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கர்மாவின் கடவுளான சித்திர குப்தன் ஒரு மனிதனின் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களைப் பதிவு செய்பவராகக் கருதப்படுகிறார். அப்படிப்பட்ட கடவுளை, கோட் சூட் அணிந்து சித்தரித்திருப்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வருகிற நவம்பர் 18-ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.