சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படமும், ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன.
இவ்விழாவில் நடிகை ஹேமமாலினி, ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்கள் இஸ்த்வான் சாபோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்க, உ.பி. மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சேகல் பெற்றுக்கொண்டார்.