விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர்.
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் நிறுவனங்கள் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது எனத் தெரிவித்த நிலையில் மல்டிப்ளெக்ஸில் எந்த காட்சியும் திரையிடப்படவில்லை. மேலும் மேற்கு வங்கத்திலும் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தி கேரளா ஸ்டோரி படக்குழுவினரை சந்தித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நடிகை அதா சர்மா, இயக்குநர் சுதிப்தோ சென் உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார் யோகி ஆதித்யநாத்.