2019ஆம் ஆண்டுக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை, கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2019ஆம் ஆண்டிற்கான 'தாதா சாகேப் பால்கே விருது' இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என அவரது பங்களிப்பு சிறப்பானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஸ்வர், கன்னட நடிகர் ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கும் நிலையில், அவருக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார். அதில், "முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பை பெற்றவரும், தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் நண்பருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினி சாருக்கு என் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.