மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதியின் ரசிகர்கள் திரையரங்கில் ஸ்வீட் கொடுத்தும் வெடி வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தியிருந்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்தியிருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
முன்னதாக உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற உடனே, "என்னுடைய நடிப்பில் இப்படம் கடைசி படமாக வெளியாகும்" என அறிவித்திருந்தார். பின்பு இப்படத்தின் ஆடியோ விழாவில், "அடுத்ததாக நான் ஒரு படம் நடிக்கும் சூழல் வந்தால் அது தன் படத்தில் தான் இருக்க வேண்டும் என மாரி செல்வராஜ் சொல்லியிருக்கிறார். அடுத்த 3 வருடங்கள் கண்டிப்பாக படம் நடிக்கமாட்டேன். அதன் பிறகு எனக்கு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மாரி செல்வராஜ் கேட்டதற்கு, அடுத்து நான் மீண்டும் படம் நடித்தால் அது உங்கள் இயக்கத்தில் தான் நடிப்பேன் என வாக்குறுதி அளித்திருக்கிறேன்" எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தை புதுக்கோட்டையில் பார்த்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "அமைச்சராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்பது சட்டம் கிடையாது. உதயநிதி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும். மாமன்னன் கடைசி படம் என்று அவர் கூறியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனப் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் உதயநிதி, சென்னையில் படக்குழுவினரோடு செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், “இப்படம் கடைசி படமாக உங்களது எத்ர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அல்லது தொடர்ந்து நடிப்பீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, "நிறையவே பூர்த்தி செய்துவிட்டது. இனியும் படம் நடிக்க வாய்ப்பில்லை ராஜா" என கிண்டலாகப் பதிலளித்தார்.