மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக வடிவேலுவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
மேலும் வெற்றியின் காரணமாக மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதையடுத்து படத்தின் வெற்றியை முன்னிட்டு படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை சந்தித்து வாழ்த்தி நன்றி கூறினார் உதயநிதி. அந்த வகையில் தற்போது வடிவேலுவை நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளார் உதயநிதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலுவை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், "மாமன்னன் படத்தில் நடித்ததற்கு நன்றி. நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை; முழுமையாக வாழ்ந்துள்ளீர்கள். உங்களுடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் #மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.@mari_selvaraj @KeerthyOfficial #FahadFaasil @arrahman @thenieswar @MShenbagamoort3 pic.twitter.com/e5xkjdfRFU— Udhay (@Udhaystalin) July 5, 2023